போதை பொருளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா? - ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி


சென்னை: போதைப்பொருளுக்கு எதிரானதிமுக அரசின் தீவிர நடவடிக்கைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்தலாமா என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சங்கரன்கோவிலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழகபோலீஸார் ஒரு கிராம் கூட ரசாயன போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சாவை மட்டுமே பிடித்துள்ளனர்' என அபாண்ட குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநர் ராஜ்பவனுக்குள்ளும் வெளியேவும் அரசியல் பேசுவது, அவதூறுகளை வீசுவதை தன்பொழுதுபோக்காக வைத்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகுதான் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போதையில்லா தமிழகத்தை உருவாக்க நேர்மையான நடவடிக்கைகளை முதல்வரே முன்னின்று தொடர்ந்து எடுத்து வருகிறார். திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தீவிரநடவடிக்கைகளால், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

காவல்துறையின் கடுமையான நடவடிக்கையால் தமிழகத்தில் கஞ்சா பயிரிடுதல், அறவே ஒழிக்கப்பட்டு ‘பூஜ்ஜிய சாகுபடி’ என்ற நிலையை எட்டியுள்ளோம். போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் 2022-ம் ஆண்டு 10,665 வழக்குகள் போடப்பட்டு, 14,934 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டில், குற்றம்சாட்டப்பட்ட 14,770 பேர் மீது 10,256 வழக்குகள் பதியப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 9,750 குற்றவாளிகள் மீது 6,053 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை தெரிந்து கொள்ளாமல், “கஞ்சா அல்லாத போதைப் பொருட்களை தமிழகத்தில் மத்தியஅரசின் அமைப்புகளே கைப்பற்றுகின்றன” என ஆளுநர் சொன்னது வடிகட்டிய பொய். அதிமுக ஆட்சியில் அமைச்சர்களே குட்கா விற்பனைக்கு துணை போனார்கள். அவர்கள் மீதான வழக்குக்கு அனுமதி கொடுக்கும் கோப்பை கூட ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், போதைப் பொருள் ஒழிப்பு பற்றி இப்போது பேசுவது விந்தையாக உள்ளது. இந்நிலையில், திமுக அரசின் தீவிர நடவடிக்கையைக் கொச்சைப்படுத்திப் பேசும் தார்மீகஉரிமை ஆளுநருக்கு இருக்கிறதா?

போதை மருந்துகள் மற்றும் உள வெறியூட்டும் பொருட்கள் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் கைதானவர்களில் பாஜகவைச் சேர்ந்த ரவுடிகள்தான் அதிகளவில் உள்ளனர். அவர்களை தேடித்தேடி கட்சியில் சேர்த்துக் கொண்டது தமிழக பாஜகதான். போதைப் பொருள் வழக்குகளில் இருக்கும் பாஜகவினரின் பிம்பத்தை மறைக்க ஆளுநர் ரவி, திமுக ஆட்சி மீது அநியாயமாகப் பொய் குற்றச்சாட்டை போகிற போக்கில் வீசிச் செல்கிறார்.

இந்தியா முழுவதும் கூட பா.ஜ.க. நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். அவர்களைப் பற்றி ஆளுநர் ஏன் பேச மறுக்கிறார். போதை பொருட்களின் தலைநகர் குஜராத் பற்றியெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை என்றார்.

x