சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த மக்களுக்கு தமிழக அரசு போதிய வசதிகளை செய்யாத காரணத்தால்தான் 5 பேர் உயிரிழந்தனர் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: பொது மக்களுக்கான அடிப்படை வசதிகளையும்,போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே உயிரிழப்புக்கு ஒரே காரணம். முதல்வர்ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம்பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யாதது அவரது நிர்வாக தோல்வியைக் காட்டுகிறது.
முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை: நடிகர் விஜய் கட்சியின் மாநாடு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பாஜக மாநாடு, ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு, விமானப்படை சாககச நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்?
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பொதுமக்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதற்கு முழு முதற்காரணம் அடிப்படை வசதிகள்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத திமுக அரசுதான். அரசு நிகழ்ச்சியைக் கூட முறையாக நடத்த இயலாத அளவுக்கு திமுக அரசு விளங்குகிறது.
பாமக தலைவர் அன்புமணி: லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வெப்பவாத அபாயம் பற்றிய எச்சரிக்கை முன்பே விடப்பட்டதா, குடிநீர் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் பொதுவாக எழுந்துள்ளன. இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: இந்த உயிரிழப்புகள் வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கிறது. வெயில் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏற்பாட்டில் குறைபாடுகள் இருந்தால் அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா: லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்துக்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை. இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முன் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசின் கவனக்குறைவால் வான்படை சாக நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல், வேதனை நிகழ்வாக மாறிவிட்டது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்று தெரியும்பட்சத்தில் உரிய முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடுகளை முறைப்படுத்தியிருக்க வேண்டும்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: இந்த நிகழ்வு அரசினுடைய நிர்வாக சீர்கேட்டுக்கு முன்னுதாரணமாகும். இந்நிகழ்ச்சிக்கு தமிழக அரசு எந்தவித பாதுகாப்பும் செய்யாமல் தவறவிட்டது கண்டனத்துக்கு உரியது. இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: கார் பந்தயம், பவள விழாவுக்கு கவனம் செலுத்திய திமுக அரசு, மெரினா கடற்கரையில் அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
தவெக தலைவர் நடிகர் விஜய்: மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்பட செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இதேபோல், வி.கே.சசிகலா, பாஜக நிர்வாகி சரத்குமார், தமிழகவாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேதிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உட்பட பலரும் அரசு மீது குற்றம்சாட்டி உள்ளனர்.
வெயிலின் தாக்கம், உடலில் நீர் சத்து இழப்பே உயிரிழக்க காரணம்: மருத்துவர்கள் தகவல் - சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் செய்யாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். கடுமையான வெயிலில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு 240-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 43 பேரில் 40 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 49 பேரில் 43 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர். அதேபோல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 10 பேரில் 7 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒருவர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டார். 2 பேர் உயிரிழந்தனர். உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் 4 பேர் நேற்று வீடு திரும்பினர்.
5 நபர்கள் உயிரிழப்பு குறித்து மருத்துவர் களிடம் கேட்ட போது, “அதிகப்படியான வெளியிலின் தாக்கத்தால் பாதிப்படைந்த அவர்களின் உடலில் நீர் சத்து இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்பட்ட நெஞ்சு வலி, வாந்தி, மாரடைப்பால் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். அதில், சிலருக்கு இணைநோய் பாதிப்புகளும் இருந்துள்ளது” என்றனர்.