கோவையில் கனமழை: தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது


கோவை அவிநாசி சாலையில், கொட்டும் மழைநீரில் செல்லும் வாகனங்கள்.

கோவை: தமிழகத்தின் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை (அக்.7) மதியம் முதலே வானம் மேகமூட்ட நிலையில் இருந்தது. வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது. மதியம் அவிநாசி சாலை அண்ணா சிலை சந்திப்பு, காந்திபுரம் உள்ளிட்ட சில இடங்களில் லேசாக மழை பெய்தது. அதைத் தொடர்ந்து இன்று மாலை கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் கனமழை பெய்தது. அதன் பின்னர், மழையின் வேகம் குறைந்தது. அதன் பின்னர், இரவு மீண்டும் 8.50 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரம் கனமழையாக பெய்தது. மழையின் காரணமாக, நஞ்சப்பா சாலை பார்க்கேட் பகுதி, டைடல் பார்க் சாலை, அவிநாசி சாலையின் பல்வேறு சாலையோரங்களில் மழைநீர் தேங்கியிருந்தது.

சுரங்கப்பாதைகள், சாலையோரங்களில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையிலான மாநகராட்சி நிர்வாகத்தினர் தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

x