மெரினா சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: இந்திய விமானப்படை சாகச நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மெரினா சம்பவம்: அமைச்சர் விளக்கம் - “சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது நடந்த சம்பவங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இறந்தவர்கள் ஐவருமே மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்து போகவில்லை. இறந்துதான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். 15 லட்சம் மக்களும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் வந்துவிட முடியாது. எங்கெல்லாம் விமான சாகச நிகழ்ச்சி தெரியுமோ அங்கிருந்தெல்லாம் கூட மக்கள் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கே வராத சிலர்தான் பூதக்கண்ணாடியை வைத்து குற்றம் கண்டுபிடிக்கின்றனர். எனவே இதை அரசியலாக்க வேண்டாம்” என்றார்.
மெரினா சம்பவமும் எதிர்க்கட்சிகளின் சாடலும் - “முதலமைச்சர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன. இது அரசின் செயலற்றதன்மை, கையாலாகாத தன்மையை காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மெரினா சம்பவத்தை விமர்சித்துள்ளார். வான் சாகச நிகழ்ச்சியில் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“உலக சாதனை படைத்த சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு போதிய அக்கறை காட்டாதது ஏன்? தனியாரின் வருமானத்துக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் விளம்பர மோகத்துக்காகவும் நடத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு காட்டிய முழு அக்கறை ஏன் இந்நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை? என்பதே மக்களின் கேள்வி,” என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சாடியுள்ளார்.
உயர்மட்ட விசாரணைக்கு வலியுறுத்தல்: “மெரினா நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டும்,” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இனி வரும் காலங்களில் அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் சார்பில் நிதி! - “சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்வைக் காண வந்தபோது உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும்,” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
மெகபூபா முஃப்தி கட்சிக்கு பரூக் அப்துல்லா சூசக தகவல்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அவசியம் இல்லை என்றாலும் கூட, மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவை நாங்கள் ஏற்போம் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார். மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்போவதாக வெளியான செய்திகளுக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
இருவருக்கு மருத்துவ நோபல் அறிவிப்பு! - மரபணு செல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றும் மைக்ரோ ஆர்என்ஏ என்ற சிறிய மூலக்கூறினைக் கண்டுபிடித்தற்காக விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே க்ரே ருவ்குன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ் அரோரா எம்.பி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: பணமோசடி வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது.
“வெற்றி நமக்கே” - இஸ்ரேல் வீரர்களிடம் நெதன்யாகு உறுதி: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டார். அதன்பின், ‘ஒன்றிணைந்து போராடுவோம். கடவுளின் உதவியால் வெற்றி நமக்கே’ என்று அவர் கூறினார். இதனிடையே, இஸ்ரேலும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்துக்கு அக்.10 முதல் 12 வரை ஆரஞ்சு எச்சரிக்கை: கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலகிறது. இதனால் அக்டோபர் 10 முதல் 12 வரை தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் 10-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், அக்டோபர் 11-ம் தேதி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், அக்டோபர் 12-ம் தேதி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை? - ஆளுநருக்கு அமைச்சர் பதிலடி: “இந்தியா முழுவதும் கூட பாஜக நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் ஆளுநர் ஏன் பேச மறுக்கிறார்? போதைப் பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றியெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.