ஸ்ரீவில்லி. வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்காத ஊராட்சி நிர்வாகம்: இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜல் ஜீவன் திட்டத்தில் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க மறுத்த புகாரில், 6 வாரத்திற்குள் குடிநீர் இணைப்பு வழங்கவும், பயனாளிக்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ஏ.லட்சுமியாபுரம் ஊராட்சி சுண்டங்குளம் பகுதியை சேர்ந்த திலகராஜ் மனைவி மாலதி. இவரது வீட்டிற்கு 31 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு இருந்து வந்துள்ளது. ஊராட்சியில் ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புகளிலேயே மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு பெற மாலதி ரூ.300 கட்டணம் செலுத்தியுள்ளார். ஆனால் மாலதியின் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. குடிநீர் இணைப்பு வழங்க கோரி வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் ஊராட்சி நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இது குறித்து மாலதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அறிவிப்பு அனுப்பியும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் யாரும் ஆஜராகாததால் தோன்றா தரப்பினராக கருதப்பட்டு, மாலதி வீட்டுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் 6 வாரத்திற்குள் குடிநீர் இணைப்பு வழங்கவும், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டனர்.

x