ஶ்ரீவில்லி.யில் ரூ.1 கோடியில் திருப்பாற்கடல் தெப்பம் சீரமைப்பு - அடிப்படை வசதிகள் இல்லை என புகார்


ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூரில் ரூ.1.07 கோடி மதிப்பில் நடைமேடை வசதியுடன் சீரமைக்கப்பட்ட திருப்பாற்கடல் தெப்பத்தில் குடிநீர், இருக்கை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் நடைபயிற்சி செல்வோர் சிரமத்தில் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருப்பாற்கடல் தெப்பத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைத்து, சுற்றிலும் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைப்பதற்காக கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, தெப்பக்குளத்தின் மூன்று பக்கங்களிலும் சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஆனால், கிழக்கு கரையில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் பழைய நிலையிலேயே விடப்பட்டதால், புதர் மண்டி, பாசி படர்ந்து தண்ணீர் பச்சை நிறத்திற்கு மாறிவிட்டது. திருப்பாற்கடல் தெப்பத்திற்கு நீர் வருவதற்காக பெரியகுளம் கண்மாயில் இருந்து 130 மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்க 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.4.15 லட்சம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், நேரடியாக கண்மாயில் இருந்து குழாய் பாதிக்காமல், வாய்க்காலில் இருந்து குழாய் பதிக்கப்பட்டதால், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தெப்பத்தில் நடைபயிற்சி சென்று வரும் நிலையில், அங்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்படாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நடை பாதையின் தெற்குப் பக்கத்தில் உயரழுத்த மின் கம்பி தாழ்வாகச் செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே நடைபயிற்சி சென்று வருகின்றனர்.

நடைபாதை ஓரத்தில் புதர்மண்டி உள்ள நிலையில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருட்டாக இருப்பதால் இரவில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாகவும் இது மாறி வருகிறது. திருப்பாற்கடல் தெப்பத்தில் நடைபயிற்சி செல்வோருக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x