“மெரினா சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்” - டிடிவி.தினகரன்


தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகிறார். உடன் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளனர். படம்: ஆர்.வெங்கடேஷ்.

தஞ்சாவூர்: சென்னை விமான சாகச நிகழ்ச்சி நெரிசலில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் 10 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்ற நிலையில், 5 பேர் இறந்துள்ளனர். விமானப்படை நிகழ்ச்சிக்கு 15 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வளவு மக்கள் கூடும் நிலையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் இறந்தவர்கள் நெரிசலில் சிக்கி இறக்கவில்லை. வெயில் நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் இறந்துள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகையில் கூட்ட நெரிசலில் இருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் சிக்கித் தவித்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

இது முதல்வரின் கவன குறைவு என்று கூறுவதா? அல்லது அவரது கவனத்துக்கு செல்லவில்லை என்று கூறுவதா? அல்லது காவல்துறை மீது குற்றம் சொல்வதா? விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இது போன்ற நிகழ்வுகள் குறித்து என்ன கூறுவது? இதற்கு முழு பொறுப்பையும் முதல்வர் தான் ஏற்க வேண்டும். இங்கு முதல்வருக்கும் அவரது குடும்பத்துக்கும் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களாக இருக்கட்டும். வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. கூலிப்படைகள் மூலம் நடக்கும் கொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதுக்கெல்லாம் காரணம். போதை மருந்து பழக்கம், கஞ்சா மற்றும் போதை மருந்து வியாபாரத்தை அரசு கட்டுப்படுத்த தவறியதால் இங்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இந்த விஷயத்தை நாங்கள் அரசியலாக்கவில்லை. கும்பகோணம் மகாமக குளத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குளிக்க வந்த போது ஏற்பட்ட விபத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று அரசியல் ஆக்கியது திமுக தான். இவர்கள் செய்யும் தவறுகளையும், திமுக நிர்வாகிகள் ஈடுபடுகின்ற போதை மருந்து கடத்தலையும் போதை மருந்து வியாபாரத்தை பற்றி கூறினால் அது அரசியலாம்.

பல லட்சம் மக்கள் கூடும் இடத்தில் இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் முன்னேற்பாடுகள் செய்யாமல் இத்தனை உயிரிழப்புக்கு காரணமாக இந்த அரசாங்கம் இருக்கும்போது அதை விமர்சனம் செய்ய சாதாரண குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டில் வாழ்கிற ஒரு குடிமகனாக நான் சொல்றேன். அரசியல் செய்யவில்லை. இனியாவது இந்த அரசு திருந்துமா என பார்க்கணும்.

திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஜனநாயக ரீதியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள். பழனிசாமிடம் இரட்டை இலை இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக கண்ணை மூடிக்கொண்டு காவடி தூக்குபவர்கள், தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள், விழித்துக் கொள்ள வேண்டும்.

காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை. சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் எளிதாக கூறி கர்நாடக அரசிடமிருந்து காவிரி தண்ணீரை எளிமையாக பெற்று தரலாம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்களோடு மக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் ஆதரவோடு கூட்டணி பலத்தோடு நாங்கள் திமுகவை வீழ்த்துவோம். மேலும் திமுகவுடன் சேர்த்து பழனிசாமியையும் வீழ்த்துவோம். 2026-ல் நடக்கும்" என்று தினகரன் கூறினார்.

x