மனுவுடன் தரையில் படுத்து கட்டிடத் தொழிலாளி போராட்டம் - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!


கோவை: கூலி நிலுவை வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் படுத்து உருண்ட கூலித் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. அப்போது, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுடன் வந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் வைத்திருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது: "குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நான் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். கோவை மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரது வீட்டை புதுப்பிப்பதற்காக ரூ.57,000 சம்பளம் பேசி அப்பணியை எடுத்துச் செய்தேன். எனக்கு தொடக்கத்தில் ரூ.5 ஆயிரத்தை முன் பணமாக கொடுத்த ராம்குமார், மீதி தொகையை வேலை முடிந்ததும் கொடுத்து விடுவதாக உறுதியளித்தார்.

ஆனால், வேலையை முடித்த பின்பும் அவர் மீதி தொகையை எனக்கு கொடுக்கவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனது கோரிக்கையை வலியுறுத்தி நூதன முறையில் கையில் மனுவுடன் தரையில் படுத்து உருண்ட கட்டிடத் தொழிலாளியின் செய்கையால் கோவை மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

x