கள்ளக்குறிச்சியில் பரபரப்பு: நகர்மன்றத் தலைவருடன் கவுன்சிலர்கள் வாக்குவாதம்!


பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நகர்மன்றத் தலைவரிடம் வாக்குவாதம் செய்யும் கவுன்சிலர்கள்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் அமைக்க 2 வார்டு கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நகர்மன்றத் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்கெனவே ஆட்டிறைச்சி விற்பனைக் கூடமும், பேருந்து நிலையத்தை ஒட்டிய வீதியில் மீன் கடையும் இயங்கி வந்தது. சில அசம்பாவித சம்பங்களால் ஆட்டிறைச்சி மற்றும் மீன் கடைகள் அப்பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் மற்றும் மசூதி அருகே இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கோயில் அருகே உள்ள மாமிசக் கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த ஆட்டிறைச்சி கூடத்தை ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்து மீன் அங்காடி கட்டியுள்ளது. இந்த அங்காடியில் மீன் விற்பனை செய்வதற்கான வியபாரிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கள்ளக்குறிச்சி நகர்மன்றத்தின் 8 மற்றும் 9வது வார்டு கவுன்சிலர்கள் இன்று நகர்மன்றத் தலைவர் சுப்ராயலுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 6 மாத காலமாக மீன் மார்க்கெட் கட்டுமானப் பணிகளை நடைபெற்ற போது எவ்வித எதிர்ப்புத் தெரிவிக்காமல் தற்போது டெண்டர் விடும்போது எதிர்ப்பது ஏன் என கவுன்சிலர்களிடம் கேள்வி எழுப்பினார் நகர்மன்றத் தலைவர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற கவுன்சிலர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

x