போதை பழக்கத்துக்கு எதிராக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்


தென்காசி: போதைப் பழக்கத்துக்கு எதிராக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆஃப் தென்காசி அறக்கட்டளை, ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம்மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி வரவேற்றார்.

இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியாவில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாள் மாலையிலும் ராஜ்பவனில் பூஜை நடைபெற்று வருகிறது. நான் தினமும் நவராத்திரி பூஜையில் பங்கேற்பது வழக்கம்.

நாட்டின் பல்வேறு பகுதிகள் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் தற்போது போதைப் புழக்கத்தால் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு உள்ளாகி பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. காவல் துறையினர்டன் கணக்கில் கஞ்சாவைப் பறிமுதல் செய்வதாக செய்திகளில் பார்க்கிறேன்.

எனினும், ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யவில்லை. ஆனால், மத்திய அமைப்புகள் அதுபோன்ற போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் போதைப் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பேசும்போது, “1956-ல் ஏழை நாடாக இருந்த சிங்கப்பூர், தற்போது உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் உள்ளது. போதைப் பொருளின் தாக்கத்தை தடுக்க, கடும் தண்டனையைக் கொண்டு வந்தனர். தன்னம்பிக்கை, தன்னார்வம், தன்னொழுக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்” என்றார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசும்போது, “இந்திய அளவில் 32 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மீதி 68 சதவீதம் பேரைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அரசு முயற்சித்தால் 5 அல்லது 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி விடலாம்” என்றார்.

x