சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியனாது கண்டுகளித்த மக்களுக்கு த்ரில் அனுபவத்தை தந்தது. ஆனால், கட்டுக்கடங்காத மக்கள் படையெடுப்பால் மின்சார, மெட்ரோ ரயில்கள் திணறின.
சென்னையின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமானது. உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் புலம்பித் தள்ளினர்.
இந்திய விமானப் படை 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில், மெகா வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது.
லிம்கா சாதனை: 72 விமானங்கள் நிகழ்த்திக் காட்டிய சாகசங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 15 லட்சம் பேர் பார்த்ததன் மூலம் இந்நிகழ்ச்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியை சாதனை நிகழ்வாக மாற்ற பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு கண்டுகளிக்க வேண்டும் என விமானப் படை அழைப்பு விடுத்தது. 15 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு மக்கள் படையெடுத்த போதிலும், நிர்வாக ரீதியில் பல சொதப்பல்கள் அரங்கேறின.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து மூலமாக இன்று காலை 7 மணி முதல் சென்னை மெரினா கடற்கரை நோக்கி மக்கள் வரத் தொடங்கினர். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் இருந்து மின்சார ரயில்களில் சென்னை கடற்கரைக்கு வந்த மக்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
காலை 8 மணிக்கு பிறகு, செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல் , வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய மார்க்கங்களில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.
செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், எழும்பூர், பூங்கா, சிந்தாதிரிபேட்டை, திருமயிலை, வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மக்கள் கூட்டம் அலைமோதியது.
அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் ஏறமுடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், பெரும்பாலான மக்கள் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு தங்கள் வீட்டுக்கு திரும்பினர்.
மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் பிதுங்கியது. குறி்ப்பாக சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களில் இன்று காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது.
விமான நிலையம், ஆலந்தூர், கிண்டி, அரசினர் தோட்டம், சென்ட்ரல் உள்பட முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ‘க்யூஆர்’ கோடு மூலமாக டிக்கெட் எடுக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.
அதேபோல், சென்னையின் பல்வேறு சாலைகளிலும் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் பயணம் செய்த பலர், வேறு வழியின்றி பாதி வழியிலேயே வீடு திரும்பினர்.
போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததும், உரிய திட்டமிடல் இல்லாததுமே இதற்குக் காரணம் என பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டினர்.
ரயில் மற்றும் சாலை போக்குவரத்து நெருக்கடிகளைத் தாண்டி மெரினா கடற்கரைக்குச் சென்று விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தவர்களுக்கு மீண்டும் வீடு திரும்புவது பெரும் சாதனையாக இருந்தது.
மக்களின் வசதிக்காக, வண்ணாரப்பேட்டை - ஏஜி டிஎம்எஸ் மார்க்கத்தில் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இருப்பினும், மக்கள் திரும்பியபோது, அரசினர் தோட்டம், எல்ஐசி, சென்ட்ரல் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரேநேரத்தில் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாலை வரை மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் இந்த கூட்ட நெரிசல் நீடித்தது.
தமிழக அரசும், ரயில்வே துறையும் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் இவ்வளவு வேதனை அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது என்று பொதுமக்கள் புலம்பினர்.