விவேகானந்தர் மண்டபம் - திருவள்ளுவர் சிலை கண்ணாடி கூண்டு பாலப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை


கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலப்பணியை தமிழ்நாடு கடல்சார் வாரிய செயல் அலுவலர் வள்ளலார் மற்றும் அதிகாரிகள் பார்வை

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடி கூண்டு பால பணிகளை இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக கடல்சார் வாரிய செயல் அலுவலர் வள்ளலார், துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வரத்துடன் பார்த்து செல்கின்றனர். இதற்காக தமிழக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு படகுகள் இயக்கப்படுகிறது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்படும் படகுகள் கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் அருகில் உள்ள திருவள்ளுவர் பாறைக்கு இயக்கப்படுவதில் அவ்வப்போது தடங்கல் ஏற்படுகிறது. இதனால் திருவள்ளுவர் சிலையை காண முடியாமல் பல நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஒரே நேரத்தில் 3 படகுகளை நிறுத்தும் வகையில் ரூ.20 கோடி செலவில் 100 மீட்டர் அளவில் படகு தளம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இரு பணிகளை தமிழ்நாடு கடல் சார் வாரிய செயல் அலுவலர் வள்ளலார் ஆய்வு செய்தார்.

விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையிலான கண்ணாடி கூண்டு பால பணிகள், விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளம் விரிவாக்க பணி ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்து வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது துறைமுக அலுவலர் கேப்டன் ஜோ மானக்ஷா, துறைமுக பாதுகாப்பாளர் தவமணி, மற்றும் அலுனலர்கள் இருந்தனர்.

பணி தாமதமாக வாய்ப்பு!

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடிஇழை கூண்டு பாலப்பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இதையே கடல்சார் வாரிய செயல் அலுவலர் வள்ளலார் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இந்த பாலத்தையும் இணைக்கும் வகையில் இரு பில்லர்கள் அமைக்கப்பட்டு இணைப்பு ரோப்கள் போடப்பட்டுள்ளன. மீதமுள்ள 70 சதவீத பணிகள் உள்ளன. இனி வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் அதிகமாக உள்ள இணைப்பு பாலப்பணி மேலும் தாமதமாக வாய்ப்புள்ளது. திட்டமிட்டவாறு டிசம்பர் மாத இறுதியில் முடிவதில் சிரமம் உள்ளது. 2025 மார்ச் மாதத்திற்கு பின்பே பாலப்பணி முழுமைபெற வாய்ப்புள்ளது. இதனால் சபரிமலை சீஸனும் விரைவில் துவங்கவுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே சென்று வர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

x