கொடாத்தூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தர அமைச்சரிடம் மாணவர்கள் கோரிக்கை


புதுச்சேரி: கொடாத்தூரில் விளையாட்டு மைதானம் அமைத்துதர வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயத்திடம் இளைஞர்கள், மாணவர்கள் நேரில் கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கொடாத்துார் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள இளைஞர்கள் விளையாட, விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் பலரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, தவறான பாதைக்கு செல்லும் சூழல்நிலை உருவாகி வருகிறது.

இதனை தடுக்கும் பொருட்டு கொடாதூர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் இன்று தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுக்கவும், கிராமத்தில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையிலும் கைபந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு, மினி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.

அதற்கான இடம் கொடாத்துார் ஏரிக்கரை அருகே அமைந்துள்ளது. அதனை பார்வையிட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரினர். இளைஞர்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் நமச்சிவாயம், கொம்யூன் ஆணையர் எழில் ராஜனை அழைத்து, இளைஞர்கள் தெரிவித்த இடத்தை உடனடியாக பார்வையிட்டு, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

x