“தமிழ்மொழியின் பெருமைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுசெல்ல வேண்டும்”


புதுச்சேரி: தமிழ்மொழி குறித்த பெருமைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வாணிதாசன் கலை இலக்கிய பேரவை சார்பில் கவிஞர் வாணிதாசனின் 110 வது பிறந்தநாள் விழா, நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா புதுச்சேரி தமிழ் சங்கத்தில் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல்லாசிரியர் வளர்மதி முருகேசன் தொகுத்த வாணிதாசனார் தீந்தமிழ் அமுதம் மற்றும் வாணிதாசனார் சுயசரிதை ஆகிய நூல்களை வெளியிட்டார்.

தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பேசியதாவது: ''தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் புதுச்சேரி மண் எப்போதும் துணை நின்று கொண்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வந்த பிறகு தான் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழறிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கான கலைமாமணி தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழறிஞர்கள், கலைஞர்களுக்கு இந்த அரசு அவர்களுக்குரிய மரியாதையை அளித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நமது தமிழ் மொழி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி நமது பாரத தேசத்தில் இருக்கின்ற தமிழ் மொழிதான் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுத்துரைத்து உள்ளார். புதுச்சேரி அரசு விடுபட்ட ஆண்டுகளுக்கான தமிழறிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கான கலைமாமணி மற்றும் தமிழ்மாமணி விருதுகளை விரைவில் வழங்க உள்ளது. அதற்கான தேர்வுக்குழு கூட்டமும் வெகு விரைவில் நடைபெற உள்ளது.

தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதில் எப்போதும் எனக்கு பெருமைதான். நமது தாய்மொழியான தமிழ்மொழி குறித்த பெருமைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது குழந்தைகளுக்கு வாசித்தல் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழறிஞர்களின் நூல்களை அவர்கள் படித்து தமிழ் மொழியின் பெருமைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். என்றார். விழாவில் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

x