புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளியில் மிளகு தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சேந்தன்குடியைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர், அதே ஊரில் உள்ள தனது வீட்டைச் சுற்றிலும் மிளகு சாகுபடி செய்து வருகிறார். ஆண்டுக்கு சுமார் 1 டன் மிளகு அறுவடை செய்து வருகிறார். விவசாயி செந்தமிழ் செல்வனின் முன்மாதிரி முயற்சியைப் பாராட்டும் விதமாக அவருக்கு பசுமை முதன்மையாளர் எனும் விருதும், ரூ.1 லட்சமும் வழங்கி தமிழக அரசு அண்மையில் பாராட்டியது.
இதையடுத்து, செந்தமிழ் செல்வனின் மிளகு தோட்டத்தை அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமார், பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீ.ஜோதிமணி ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். செந்தமிழ்செல்வனையும் பாராட்டினர். பின்னர், தங்களது கல்வி நிறுவனங்களில் மிளகு தோட்டம் அமைக்க உள்ளதாக இருவரும் தெரிவித்தனர். அப்போது மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பணிகளுக்காக தமிழக அரசிடம் இருந்து பசுமை முதன்மையாளர் விருது பெற்ற மரம் தங்க.கண்ணனும் உடன் இருந்தார்.
இது குறித்து குமார் மற்றும் வீ.ஜோதிமணி கூறியதாவது: ''அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விசாலமான இடம் உள்ளது. மேலும், வளாகத்தில் பனை, வேம்பு உள்ளிட்ட மரங்களும் உள்ளன. இம்மரங்களைப் பயன்படுத்தி மிளகு தோட்டம் அமைக்கப்பட உள்ளது. சொட்டு நீர் பாசன வசதியும் உள்ளது. இதேபோல, பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளி வளாகம் முழுவதும் பலவிதமான மரங்கள் அடர்ந்து உள்ளன. ஆகையால், இங்கும் மிளகு தோட்டம் அமைக்கப்பட உள்ளது. விரைவில் மிளகு கன்று நடப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கும் மிளகு சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படும்'' என்றனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளியில் ஏற்படுத்தப்படும் மிளகு தோட்டம் முதன்மையானதாக இவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.