குறிஞ்சிப்படி அருகே தார் சாலை அமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்


கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே தார் சாலை அமைத்து தர வலியுறுத்தி பாதையின் குறுக்கே பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள த.பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மாரியம்மன் கோயில் தெருவில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது, போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் மோசமாக உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதியுடன் சென்று வருகின்றனர்.

அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாததால், இப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் உட்பட அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு இருந்து வந்தனர். மேலும் வடிகால் வசதி இல்லாததால், சாலையிலேயே கழிவுநீர் தேங்கி தொற்று நோய் அபாயம் ஏற்படும் நிலையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கின்றது.

இதனால் இச்சாலையின் வழியே நடந்து, பைக் மற்றும் சைக்கிள்களில் செல்லும் நபர்கள் சேற்றில் சிக்கி கீழே விழுகின்றனர். இந்நிலையில் சாலை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலத்திலும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் கந்த சிவராமன், நிர்வாகி தங்கரத்தினம், ஒன்றிய செயலாளர் தண்டபாணி ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று(அக்.6) திடீரென மழைநீர் தேங்கி சேறும் சகதியுமான சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பெண்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

x