குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இரு தரப்பினர் தடிகளுடன் மோதல் - வீடியோ வைரல்


பிரதிநிதித்துவப் படம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்தின் போது, கடற்கரை பகுதியில் இருதரப்பினர் கம்புகளுடன் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்.12ம் தேதி நள்ளிரவு கடற்கரையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி கொடியேற்ற தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்திருந்தனர். குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தபக்தர்கள் மாலை அணிந்து கடலில் நீராடி கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு தசரா குழுக்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தசரா திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் சாதி கொடிகளை கொண்டு வரக்கூடாது. சாதி படங்கள் அணிந்த ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று ஏற்கெனவே காவல்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால் அதை மீறி பக்தர்கள் விழாவுக்கு சாதிக் கொடியுடன் வந்துள்ளனர். மேலும், சாதி படங்கள் கொண்டடி - சர்ட்களை அணிந்துள்ளனர். எனவே, தசரா திருவிழா சூரசம்காரத்தன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாதி கொடிகள் மற்றும் படங்கள் கொண்ட டி-சர்ட்கள் அணிந்து வர கடுமையான தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கூறும்போது, “கடற்கரையில் தகராறில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் சாதி டி- ஷர்ட் அணிந்து வந்துள்ளனர். மற்றொரு தரப்பினர் யார் என்று தெரியவில்லை. முதல் கட்ட விசாரணையில் காலில் ஒருவர் மிதித்ததால் தான் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. சாதி கொடிகள் மற்றும் டி- சர்ட் அணிந்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

x