ஆயுத பூஜை: சேலம், நாமக்கல் வழியாக சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்


சேலம்: ஆயுதபூஜை விடுமுறை முன்னிட்டு சேலம், நாமக்கல் வழியாக சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே வரும் 9-ம் தேதியும், நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே 10-ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

வரும் 11-ம் தேதி ஆயுதபூஜை, 12-ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்களைத் தொடர்ந்து, மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என 3 நாட்களும் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. எனவே வெளியூர்களில் வசிப்பவர்கள் ஆயுத பூஜையை கொண்டாட சொந்த ஊர் திரும்புவர் என்பதால் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு வரும் 10ம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் (எண்.06178) சிறப்பு ரயிலானது சென்னையில் வரும் 9-ம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, சேலம் இரவு 11.48 மணி, நாமக்கல் நள்ளிரவு 12.49 மணி, கரூர் நள்ளிரவு 1.33 மணிக்கு வந்தடைந்து, காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

இதேபோல நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் (எண்.06179) சிறப்பு ரயிலானது நாகர்கோவிலில் வரும் 10-ம் தேதி இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு, கரூர் அதிகாலை 4.28 மணி, நாமக்கல் அதிகாலை 5.09 மணி, சேலம் காலை 6.15 மணிக்கு வந்தடைந்து, காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

x