சென்னை: ‘மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்’ என சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா எழுதிய எதிர்பாரா திருப்பம், மேடையெனும் வசீகரம், கேளுங்கள் சொல்கிறேன், முரசொலியின் மடியில் தவழ்ந்தவை, காட்சியும் கருத்தும் என 5 நூல்களை கலைவாணர் அரங்கில் முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திருச்சி சிவாவின் நூல்கள் அரசியல் புத்தகங்களாக மட்டுமின்றி, அரசியலுக்கு வெளியில் இருப்பவர்களும் படிக்கும் இலக்கியநூல்களாகவும் உள்ளன. சிறைச்சாலை என்ற பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நாங்கள் என்பதால்தான், யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் இன்றைக்கும் செயல்பட்டு வருகிறோம். எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை திராவிட இயக்கத்துக்காகத் தாரைவார்த்துக் கொடுத்ததால் வளர்ந்த இயக்கம்இது. அதனால்தான், எதிர்க்கட்சிகள் நம்மை குடும்பக் கட்சி என்று சொல்லும்போது எனக்குக் கோபம் வருவது இல்லை.
அவதூறுகளை உடைத்தெறிய...: புத்தகத்தில் என்னை ‘கலைஞராய் வாழும் தளபதி’ என்று எழுதியிருக்கிறார். இதில் ஒரு திருத்தம். கலைஞராய் வாழ கருணாநிதியால் மட்டும்தான் முடியும். என்னைப் பொருத்தவரை, ‘கலைஞர் வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்’.இன்றைக்கு பாஜக.வினர் பொய் களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். அவற்றை உடைத்தெறிய இந்த நூல்கள் மாதிரி இன்னும் பல புத்தகங்கள் தேவை. இவ்வாறு அவர் பேசினார்
திருச்சி சிவா எம்.பி பேசும்போது, முதல் முறையாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் ஒன்றாக பங்கேற்கும் கட்சி குடும்ப விழா, இலக்கிய விழா, அரசு விழா இது.நான் அதிகம் எழுத விரும்புவன். தொடர்ந்து எழுதுவேன்” என்றார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, “கருணாநிதி இருந்தவரை நமக்காக பேச அவர் இருந்தார். அப்பேர்பட்ட குரலின் தொடர்ச்சிதான் சிவா. உண்மையை சொல்ல தைரியம் தேவையில்லை. பொய் சொல்லத்தான் தைரியம் வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர் கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.