தரமான முறையில் தயாரித்து இனிப்பு, கார வகைகளை விற்க வியாபாரிகளுக்கு சென்னை ஆட்சியர் அறிவுரை


சென்னை: பண்டிகைக் காலத்தின் இனிப்பு மற்றும் கார வகைகளை தரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது பண்டிகை காலம் தொடங்கவுள்ள தமிழ்நாட்டில், முக்கியமாக ஆயத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள். கார வகைகள், கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பது வழக்கம்.

மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம்செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.

சுகாதாரமான சூழலில்..: மேலும், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு. விபரச் சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர்,தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் சைவ மற்றும் அசைவ குறியீடு, எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம்,பதிவு எண் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது. உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற்றநிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பற்றிய விபரச் சீட்டு இருந்தால் மட்டுமே வாங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ் - அப் எண்ணிலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும், உணவு பாதுகாப்புத் துறையின் செயலி மூலமாகவும் புகார் செய்யலாம் . இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

x