திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன: ஹெச்.ராஜா விமர்சனம்


சென்னை: பாஜக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுதலைவர் ஹெச்.ராஜா முன்னிலையில் எம்.ஜி.ஆர். மக்கள் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:

ஏழை மக்களுக்கான திட்டங்களை தரும் ஒரே தலைவர் பிரதமர் மோடிதான். கரோனா காலக்கட்டத்தில் இருந்து ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு என மத்திய அரசு நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவசமாக வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், 20 கிலோ அரிசி, 4 கிலோ பருப்பு கிடைக்கும். இதன் இன்றைய மதிப்பு ரூ.1,500 ஆகும்.

ஆனால், திமுக ஒரு வீட்டுக்கு ஆயிரம் ரூபாய்தான் கொடுக்கிறது.மேலும், 70 வயது தாண்டிய அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசை கேட்காமலேயே தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளும் மத்திய அரசின் முழு மானியத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஒரு நபருக்கு மத்திய அரசு எத்தனை கிலோ அரிசி, பருப்பு வழங்குகிறது என்பதை தமிழக அரசு ரேஷன் கடைகளில் எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஹெச்.வி.ஹண்டே, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x