சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழா 2025-ம் ஆண்டு ஜனவரிமாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடத்தப்பட உள்ளது. இது தேசியஅளவிலான கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரியாக நடத்திட திட்டமிட்டு அதற்காக ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கி தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இந்த வைர விழாவை நடத்துவதற்காக 4 குழுக்கள் அமைப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை விவரம்: பாரத சாரணர் இயக்குநரகத்தின் வைர விழாவை நடத்துவதற்காக 4 குழுக்கள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு அதிகாரியாக சாரணர் இயக்குநரகத்தின் மாநில செயலாளரும், தொடக்கக் கல்வி இயக்குநருமான பூ.ஆ.நரேஷ் நியமிக்கப்படுகிறார்.
இதுதவிர பெருந்திரளணி சபை குழுவுக்கு ஆளுநர் தலைமை தாங்குவார். அதற்கடுத்தபடியாக முதல்வர் இருப்பார். திட்டக்குழுவுக்கு சாரணர் இயக்குநரகத்தின் மாநில ஆணையர் அறிவொளி தலைமை தாங்குவார். இதேபோல்,தொழில்நுட்பக் குழுவில் 44 நிர்வாகிகளும், செயல்பாட்டுக் குழுவில் 51 நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர்,பிரதமர் மற்றும் 86 நாடுகளில் இருந்துசாரணர் இயக்குநரகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.