‘திருமாவளவன் அப்பீல் செய்தால் திமுக கூட்டணியை விட்டு வெளியேற பரிசீலிப்போம்’ - ஆதித்தமிழர் கட்சி எச்சரிக்கை


ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன்

மதுரை: “அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடுக்கு எதிராக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மேல்முறையீடு செய்ய முயன்றால் திமுக கூட்டணியைவிட்டு வெளியேற பரிசீலிப்போம்” என ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் கூறினார்.

தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்துக்கான உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 17 பேரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து மதுரையில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: “உச்ச நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 17 பேரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொல்.திருமாவளவன் முதலில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ஆதரித்தார். தற்போது, அதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்தார். அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஆதரவு திரட்ட அவர், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்திலுள்ள 60 லட்சம் அருந்ததிய மக்களின் வாழ்வாதாரம் உயரும் நிலை வந்துள்ளது.

இவ்வழக்கிற்காக சிறப்பு வழக்கறிஞரை நியமித்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லாத தகவல்களை திருமாவளவன் மிகைப்படுத்தி பேசினார். அருந்ததியர் அல்லாத மக்களுக்கு அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது. அருந்ததியர் மக்களுக்கு 6 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கவேண்டும். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மூலம் முறைகேடாக பணிக்கு சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யவேண்டும். எளிய மக்களுக்கு எதிராக திருமாவளவன் செயல்படுகிறார்.

சீராய்வு மனுவோடு அவர், நிறுத்திக் கொள்ளவேண்டும். தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்வோம். திருமாவளவனை பெரிய தலித் தலைவராக பார்த்தோம். அவர் தனது பார்வையை சுருக்கிக் கொண்டு செயல்படுகிறார். உள் இட ஒதுக்கீட்டால் அருந்ததியர் மக்கள் மருத்துவம், சட்டம் என, அனைத்து துறைகளிலும் பயனடைகின்றனர். பொதுவாகவே இட ஒதுக்கீட்டில் பல குளறுபடிகள் உள்ளன. இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்” என்றார்.

x