திருவண்ணாமலை: புதிய மற்றும் இளம் வாக்காளர்களை கவர முனைப்புடன் செயல்படவில்லை என்ற குரல்கள், திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் இருப்பார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இளைஞர்களின் வாக்குகளை, ஒரே கட்சியால் முழுமையாக அறுவடை செய்துவிட முடியாது. இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது பலமுனை போட்டி நிலவுகிறது. புதிய வரவாக, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் களத்தில் உள்ளதால், இம்முறை இளைஞர்களின் வாக்குகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவும்.
இதை கருத்தில் கொண்டு, திமுக வியூகம் வகுத்து களப்பணியை தொடங்கிவிட்டது. ‘இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்’ என்ற குரல் ஒலிப்பதால், திமுக மீது இளைஞர்களின் கவனம் திரும்பும் என, அக்கட்சி எதிர்பார்க்கிறது. இதேபோல் புதிய மற்றும் இளம் வாக்காளர்களை கவர வேண்டும், இளைஞர்களுக்கு கட்சி மற்றும் தேர்தல் பணியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற குரல். திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவிலும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அப்போதுதான், அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் திமுகவை எதிர்கொள்ள முடியும் என, அதிமுக உட்கட்சி கூட்டங்களில் வலியுறுத்தப்படுகிறது. இதற்கு மூத்த நிர்வாகிகள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், “புதிய மற்றும் இளம் வாக்காளர்களை கவர முனைப்புடன் செயல்படவில்லை. இந்நிலை தொடரக் கூடாது. புதிய மற்றும் இளம் வாக்காளர்களை கவர்ந்திழுக்க கவனம் செலுத்த வேண்டும்” என இளைஞர்கள் மற்றும் மூத்தவர்கள், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இலை துளிருமா... மிளிருமா? - இதுபற்றி அதிமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் கூறும்போது, “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு இளைஞர்களின் வாக்குகளை அதிமுக மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இளைஞர்களின் வாக்குகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால், இளம் தலைமுறையினர் வாக்குகளை பெறுவது என்பது இம்முறை அதிமுகவுக்கு சவாலாக இருக்கும். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, திருவண்ணாமலை மாவட்ட அதிமுக பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. இங்கு இளைஞர்களை அரவணைக்கவும், அவர்களை வழிநடத்தவும் மூத்தவர்கள் முன்வரவில்லை.
மேலும், ஆளும் கட்சியுடன் முக்கியமானவர்கள் இணக்கமாக உள்ளதால் இளைஞர்களின் வாக்கு வங்கியை, கணிசமாக இழந்து வருகிறோம். கட்சி மற்றும் தேர்தல் பணிக்கு இளைஞர்களின் உழைப்பு அவசியமானது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டியது தலையாய கடமையாகும். இதை உணர்ந்து செயல்பட்டால், அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் திமுகவை எதிர்த்து அதிமுகவின் இரட்டை இலை துளிரும், மிளிரும்” என்றார்.
இளைஞர்களுக்கு கட்சியில் பதவி: இதுகுறித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தூசி கே.மோகன் கூறும்போது, “அதிமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மூத்த நிர்வாகிகளை, வேறு பொறுப்புகளுக்கு மாற்றிவிட்டு, இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு பதவி வழங்கப்படுகிறது. அவர்களை கட்சி மற்றும் தேர்தல் பணியாற்ற ஊக்குவிக்கின்றோம். அவர்களது உழைப்பை அங்கீகரிக்கின்றோம்.
மேலும், அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை, உறுப்பினர்களாக சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். இளம் வாக்காளர்களை கவர கிளைச் செயலாளர்களிடம் தொய்வு ஏற்பட்டதால், நேரடியாக கவனம் செலுத்துகின்றோம். மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், இளைஞர்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைக்க உள்ளோம். அத்துடன், நீட் தேர்வு வருகையால் மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீடு, தமிழகத்தில் புதிதாக கொண்டு வந்த 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அச்சிட்டு துண்டுப் பிரசுரங்களாக விநியோகம் செய்ய உள்ளோம்” என்றார்.