உதகை - பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வாட்டர் ஸ்கூட்டர்!


உதகை: உதகை அருகே உள்ள பைக்காரா ஏரியில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய, இரண்டு வாட்டர் ஸ்கூட்டர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்துக்கு சென்று படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பைக்காரா நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பைக்காரா சாலையை சீரமைக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை எடுத்தது.

இதற்காக, மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பணிகள் நடந்தன. மேம்பாட்டு பணிகள் முழுமை பெற்றதை அடுத்து, மூடப்பட்டிருந்த படகு இல்லம், கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, தற்போது, பைக்காராவில் 30 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதில், 19 படகுகள் 8 இருக்கை மோட்டார் படகுகள்; ஒரு படகு 10 இருக்கை மோட்டார் படகு. 15 இருக்கை மோட்டார் படகு ஒன்று. மூன்று இருக்கை அதிவேக படகுகள் 7 உள்ளன. தவிர, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, 5 இருக்கை கொண்ட ஒரு உல்லாச படகு மற்றும் இரண்டு ‘வாட்டர் ஸ்கூட்டர்’ ஆகியவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த வாட்டர் ஸ்கூட்டரை பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே இயக்குகின்றனர். இதுகுறித்து பைக்காரா வந்த சுற்றுலா பயணிகள் கூறும் போது, “இந்த வாட்டர் ஸ்கூட்டரில் அமர்ந்து செல்லும் போது, ஏரி மீது பறப்பதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. மழையின் காரணமாக, பைக்காரா ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் ரம்மியமாக காட்சியளிக்கிறது” என்றனர்.

x