சென்னை: தரமணியில் உள்ள இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட தென் மண்டல ஆய்வகத்தை, தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி திறந்து வைத்தார்.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் இந்திய தர நிர்ணய நிறுவனம் (BIS) செயல்படுகிறது.
சென்னை தரமணியில் இதன் தென் மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உள்ள ஆய்வகம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கல்வி சுற்றுலாவாக வரும் மாணவர்களை கவரும் வகையில் அறிவியல் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பிஐஎஸ் நிறுவன தலைமை இயக்குநர் பிரமோத் குமார் திவாரி நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசும்போது. ‘‘இங்கு ரசாயனம், நுண்ணுயிரியல், இயந்திரவியல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சோதனை செய்யும் வசதிகள் உள்ளன. அதிநவீன வசதிகளுடன் கூடிய பகுப்பாய்வு கருவிகளும் உள்ளன. அடைக்கப்பட்ட குடிநீர், தங்கம், வெள்ளி,கேபிள் வயர், கம்பி, அடுப்பு,சமையல் குக்கர், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றை சோதனை செய்ய இங்கு உள்ள மேம்பட்ட உபகரணங்கள் உதவியாக இருக்கும்’’ என்றார்.
ஆய்வகத்தின் சிறப்புகளைஅதன் தலைவர் மீனாட்சி கணேசன் விளக்கினார். பிஐஎஸ் நிறுவன தலைமை துணை இயக்குநர் (ஆய்வகங்கள்) நிஷாத் சுல்தானா ஹக்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.