சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாதுஎன அரசு தரப்பில்கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நிலையில், 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் தங்களிடம் செய்யப்படும் முதலீடுகளுக்கு 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ. 4,620 கோடி வசூலித்து மோசடி செய்ததாக சென்னைபொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் அந்நிறுவன இயக்குநர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 15 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதால் அவர்களுக்கு எதிராகலுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில்சிறையில் உள்ள முக்கிய நிர்வாகிகளான ரவிச்சந்திரன், ஜெயக்குமார், சுரேஷ், துரைராஜ் ஆகியோர் ஜாமீன் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், இந்த நிறுவனம் சுமார் 89 ஆயிரம்முதலீட்டாளரிடம் 4,620 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது.
இதில் 17 ஆயிரம் பேர் தான் இதுவரை புகார் அளித்துள்ளனர். மொத்தம் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். ஏற்கெனவே இந்த வழக்கில்இருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளது. எனவே, இவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அதையேற்ற நீதிபதி பி.தனபால், 4 பேரின்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.