சென்னை: கேள்விகளை எழுப்பியவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தவெக மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும் என தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தவெக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். அதை உணர வைக்க வேண்டும்.
நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள்போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்க பெரும்படை. நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால். அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமல்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா, மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா, களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா, இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீதுவீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்கு புரியும். தமிழக வெற்றிக்கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல. வீறுகொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர்.
இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளை தொடங்கி தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த பேரவை தொகுதி பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.
ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளை தொடர வாழ்த்துகிறேன். மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பந்தல் கால்: விக்கிரவாண்டியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள தமிழகவெற்றிக் கழக முதல் மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்வு நேற்று அதிகாலை நடைபெற்றது. மந்திரங்கள் உச்சரிக்க, மூன்று மதங்கள் சார்ந்த படங்களை வைத்து, புனித நீர் தெளித்து பூஜை நடைபெற்றது. அதிகாலை 4.50 மணிக்கு பந்தல்கால் நடப்பட்டது. பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.