மதுரை: மதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்ய பணம் கேட்டு சிலர் மிரட்டியதாக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்றுகூறியதாவது: வழக்கறிஞர்கள் என்று கூறிக் கொண்டு 3 பேர் ஆதீன அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வைகை ஆற்றைச் சுத்தம் செய்ய நாளொன்றுக்கு ரூ.15 ஆயிரம் தேவைப்படுகிறது. 20 நாட்கள் சுத்தம்செய்ய வேண்டும். அதற்குரிய பணத்தை நீங்கள் தரவேண்டும் என்று கேட்டனர்.
ஆனால், நான் இதற்கு பணம் தர முடியாது. ஆற்றைச் சுத்தம் செய்ய அரசு இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். அனைவரும் சேர்ந்துதான் சுத்தம் செய்ய வேண்டும். உங்களால் செய்ய முடியாது என்றுகூறியபோது, இதற்கு முன்பிருந்த ஆதீனம் பணம் கொடுத்தார் எனக் கூறினர்.
இதைப்போல பலரும் முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி உள்ளனர். நான் உங்களுக்கு பணம் கொடுக்க முடியாது என்றேன். உடனே அவர்கள் என்னை அவதூறாகப் பேசிவிட்டுச் சென்றனர். மேலும், ஆதீனமாக இருக்க எனக்கு தகுதி இல்லை என்றும் கூறினர். அந்த நபர்கள் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்க மாட்டேன். அடிக்கடி என்னை மிரட்டினால், அவர்களை நானே பார்த்துக் கொள்வேன். சிலர் மிரட்டுவதைகண்டுகொள்ளக் கூடாது.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து நான் பேசமாட்டேன். திருப்பதி, ஆந்திர மாநிலத்தில் உள்ளது. தமிழ்நாட்டைப் பற்றிக் கேளுங்கள், சொல்கிறேன். பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு அழைத்ததால் சென்றேன். அதற்காக திமுகவில் நான்இணைந்துவிட்டேன் என்றுஅர்த்தமில்லை. துணைமுதல்வராகியுள்ள உதயநிதிக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்