அதிமுக ஆட்சியில்தான் டெங்கு உயிரிழப்புகள் அதிகம்: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்


கோவை சிங்காநல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமுதாய நல மைய கட்டிடத்தை திறந்து வைத்து மருத்துவ பரிசோதனையை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில்தான் அதிகமாக இருந்தன என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமுதாய நல மையக் கட்டிடம் மற்றும் தாளியூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.58.10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார்.பின்னர்,அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,021 மருத்துவர்கள், 946 மருந்தாளுநர்கள், 526 உதவியாளர்கள், 977 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். நாட்டிலேயே முதல்முறையாக கலந்தாய்வு நடத்தி, அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப பணிநியமன ஆணைகளை வழங்கி உள்ளோம். மேலும், 2,253 மருத்துவர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

அதேபோல, 1,066 சுகாதார ஆய்வாளர்கள், 2,250 கிராம சுகாதார செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு தொடர்ந்தவர்களை அழைத்துப் பேசி வருகிறோம். மத்திய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசி வந்து கொண்டிருக்கிறது. எங்கும் பற்றாக்குறை இல்லை.

ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு வருபவர்களை, நிரந்தரப்படுத்த முடியாது. எந்த அரசும் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய முடியாது. ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்கு முன்பாக மழைக்காலசிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் அதிக காய்ச்சல் உள்ள கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும்15-ம் தேதிக்குப் பிறகு தேவைப்படும் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும்.

தமிழகத்தில் 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதர ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது. டெங்கு இறப்பை பொறுத்தவரை, 2012, 2017-ம் ஆண்டுகளில்தான் அதிகபட்ச இறப்பு பதிவாகி உள்ளது. நடப்பாண்டு டெங்குவால் 6 பேர் இறந்துள்ளனர்.

டெங்கு உயிரிழப்பு 2012, 2017-ல் அதிமுக ஆட்சியில்தான் அதிகமாக இருந்தது. டெங்குவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்பவர்கள் 100 சதவீதம் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்

x