தவறவிட்ட தங்கச் சங்கிலியை ஒப்படைத்த உடுமலை சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு


திருப்பூர்: உடுமலை முதலை பண்ணை வளாகத்தில் தவற விட்ட தங்கச்சங்கிலியை, பண்ணை நிர்வாகத்திடம் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

உடுமலை அருகே உள்ள அமராவதி முதலை பண்ணைக்கு சுற்றுலா வந்த திருச்செந்தூரை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், தனது தங்கச் சங்கிலியை அந்த வளாகத்தில் நேற்று முன்தினம் தவறவிட்டார். அப்போது அங்கு முதலை பண்ணையை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், கீழே தங்கச்சங்கிலி கிடப்பதை பார்த்து அதனை எடுத்தனர். தொடர்ந்து முதலை பண்ணை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் தங்கச்சங்கிலியை தொலைத்த நபர்கள் பண்ணையில் வந்து கேட்க, அவர்களுக்கு உடனடியாக ஒப்படைக்கப்பட்டது.

முதலை பண்ணை வளாகத்தில் கீழே கிடந்த தங்கச்சங்கிலியை, முதலை பண்ணை நிர்வாகிகளிடம் ஒப்படைத்த 11 வயது சிறுவர்கள் சரவணன் கிரி மற்றும் பிரதீஸ் ஆகியோரை பண்ணை நிர்வாகிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி, அனைவரின் பாராட்டை சிறுவர்கள் பெற்று வருகின்றனர்.

x