சென்னைக்கு தாராளம், மதுரைக்கு தாமதம் - மெட்ரோ திட்ட நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சமா?


மதுரை: சென்னைக்கு 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிய நிலையில், 2027ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையைப் போன்று மக்கள் நெருக்கடி கொண்ட மதுரையிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், முதல் கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலும் சுமார் 31 கிலோ மீட்டருக்கு வழித்தடம் அமைக்கப் படுகிறது. இதன்படி, திருமங்கலம் முதல் மதுரை வசந்தநகர் வரையில் உயர் நிலை மேம்பாலமும், வசந்த நகர் - தல்லாகுளம் பெருமாள் கோயில் வழித்தடம் முடிய சுமார் 10 கி.மீ ஆழத்தில் பூமிக்கடியிலும், தல்லாகுளம் - ஒத்தக்கடை வழித்தடத்தில் மேல் மட்ட பாலமும் அமைகிறது.

இத்திட்டத்தில் 5 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 26 கி.மீ., மேல்நிலை வழித்தடமாகவும் அமைக்கிறது. இந்த வழித்தடத்தில் 27 ரயில் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. மதுரை ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோயில், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் விதமாக 3 சுரங்கப் பாதை ரயில் நிலையங்களும் அமைகின்றன. வழித்தட பாதையில் மண் பரிசோதனை, ரயில் நிலையம் அமைவிடங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, அரசுக்கு இறுதி அறிக்கையும் தாக்கல் செய்தனர்.

கடந்த தமிழக பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மாநில அரசு ரூ.8,500 கோடி அறிவித்த நிலையில், விரிவான திட்ட அறிக்கையின் முடிவில் ரூ.11,360 கோடியாக அது உயர்ந்தது. மத்திய அரசின் ஒப்புதலுக்கென திட்டம் காத்திருந்தபோதிலும், கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளும் இத்திட்டம் குறித்து மதுரையில் ஆய்வு செய்தனர்.

மதுரை மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திட்டம் 2027ல் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கட்டுமான பணிக்கான அறிகுறியே இல்லை. நிலம் கையப்படுத்துதல் போன்ற பணிகளும் ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கான நிதி ரூ.63,246 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் சென்னைக்கு 2ம் கட்ட மெட்ரோவுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்கிய நிலையில், மதுரை, கோவைக்கான முதல் கட்ட மெட்ரோ திட்டங்களுக்கு நிதி வழங்குவதில் தாமதிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது இரு மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், மதுரைக்கான முதல் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறினால் மதுரையில் போக்குவரத்து நெருக்கடி குறைவதுடன் மதுரையின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற எம்பி, எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மத்திய, மாநில அரசுகளிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இல்லையெனில் மதுரை எய்ம்ஸ் இழுபட்ட கதையாகிவிடும் என்கிறார்கள் மதுரை மக்கள், இதுகுறித்து மதுரை மெட்ரோ திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு திட்டத்தை நிறைவேற்ற நிதி முக்கியம். இத்திட்ட மொத்த மதிப்பில் கடன் தொகை தவிர, எஞ்சிய நிதியை தலா 50 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இத்திட்டம் பற்றி மத்திய அரசு சில விளக்கம் மற்றும் கூடுதல் விவரங்களைக் சமீபத்தில் கேட்டது. அதற்கான விவரங்களும் மாநில அரசுக்கு அறிக்கையாக சமர்க்கப்பட்டுள்ளன. தொடர் அழுத்தத்திற்கு பிறகு சென்னைக்கான 2வது மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் மதுரை, கோவைக்கும் நிதி ஒதுக்க மத்திய நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம்” என்றார்.

எம்பி-க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்!: கடந்த ஆகஸ்ட்டில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எம்பி சு. வெங்கடேசன், “மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு நயவஞ்சகம் செய்கிறது” என, குற்றம் சாட்டினார். இந்த நிலையில், “தற்போது சென்னைக்கு நிதி ஒதுக்கி இருப்பதால் மதுரை மெட்ரோ திட்டத்துக்கும் நிதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும். திருமங்கலத்தில் இத்திட்டம் தொடங்குவதால் அத்தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரும் இதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள் மதுரை வாசிகள்.

x