புதுச்சேரி: செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பத்தில் படுகை அணை உட்பட 3 முக்கிய திட்டங்களுக்கு ரூ. 50 கோடிக்கு டெண்டர்


புதுச்சேரி: புதுச்சேரியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரி்க்கையான செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணை, கொம்பந்தான் மேட்டில் பெண்ணையாற்றில் தடுப்புச்சுவர், பாகூர் ஏரிக்கரை பலப்படுத்துதல் ஆகிய 3 திட்டங்களுக்கு ரூ. 50 கோடியில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு பெய்த மழையால், படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அணை பராமரிக்கப்படாததால், 2021-ம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து போனது. இதனால் பல்லாயிரம் கனஅடி நீர் வெளியேறி, வீணாக கடலில் சென்று சேர்ந்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரை தேக்க முடியாமல் நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதனால் இந்தப் படுகை அணையை நம்பியிருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயமும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று கூறியதாவது: ''புதுவையில் நீர்நிலைகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அந்த வகையில் செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணைக்கு ஏற்கெனவே 2 முறை டெண்டர் கோரப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் டெண்டர் ரத்தானது.

தற்போது மீண்டும் ரூ.29.85 கோடியில் வரும் 29-ம் தேதி டெண்டர் கோரியுள்ளோம். இதில் டெண்டர் இறுதிசெய்யப்பட்டு 15 நாட்களுக்கு பின் பணிகள் தொடங்கும். 12 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க தெரிவித்துள்ளோம். புதிதாக கட்டப்படும் படுகை அணை முன்பு இருந்த படுகை அணைக்கு அருகிலேயே கட்டப்படும்.

அதேபோல், கொம்பந்தான்மேட்டில் பெண்ணையாற்றில் ரூ.12.97 கோடியில் தடுப்புச் சுவர் கட்டப்படும். பாகூர் ஏரிக் கரையை பலப்படுத்தி சாலை அமைக்க ரூ.7.51 கோடிக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.50 கோடியில் நீர் நிலைகள் மேம்படுத்தப்பட உள்ளது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x