விண்ணப்பித்து 20 நாட்களாகியும் பண்டிகை முன்பணம் கிடைக்கவில்லை: போலீஸார் குமுறல்


விருதுநகர்: விண்ணப்பித்து 20 நாட்களாகியும் இதுவரை பண்டிகை முன்பணம் வழங்கப்படாத நிலையில், மீண்டும் புதிதாக களஞ்சியம் ஆப்-பில் விண்ணபிக்க வலியுறுத்துவதால் போலீஸார் குமுறலில் உள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸாருக்கு ஆண்டுதோறும் பண்டிகை முன்பணம் அரசால் வழங்கப்படும். ஒருவர் ஓராண்டில் ஏதாவது ஒரு பண்டிகைக்கு மட்டும் இதற்காக விண்ணப்பித்து முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெறலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு இதுபோன்று அரசால் முன்பணம் வழங்கப்படும். அவ்வாறு அரசால் வழங்கப்படும் முன்பணம், மாதம் 1000 ரூபாய் வீதம் பணியாளரின் ஊதிய கணக்கில் கருவூலத்தால் பிடித்தம் செய்யப்படும். பண்டிகை முன்பணம் பெற 1 மாதத்திற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸார் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது தலைமை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பித்தோர் விவரம் (பில்) துறை தலைவர் மூலம் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதுபோல், போலீஸார் தங்களது காவல் நிலையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக முன்பணம் வேண்டி விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 480-க்கும் மேற்பட்ட போலீஸார் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த 15-ம் தேதியே வழங்கப்பட்டுள்ளது. அது மட்டும் போதாது. களஞ்சியம்- ஆப் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும் என கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை முன்பணம் கொடுக்காத நிலையில், மீண்டும் களஞ்சியம் ஆப் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற கருவூலத்துறையின் அறிவிப்பால் போலீஸார் குமுறலில் உள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''பண்டிகை முன்பணத்திற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் காவல்துறையில் கடந்த 15ம் தேதியே விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டுவிட்டன. வயதான பல போலீஸாரிடம் பட்டன் செல்போன் தான் உள்ளது. தற்போது செல்போனில் களஞ்சியம் ஆப் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும் என கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது.

பண்டிகை நாளில் குடும்பச் செலவுக்காகத்தான் ரூ.10 ஆயிரம் முன்பணம் கேட்கிறோம். அதை வாங்குவதற்காக ஸ்மார்ட் போன் வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இதுபோன்ற புதிய நடைமுறையை விலக்கிக் கொண்டு, துறை மூலம் விண்ணப்பித்தோருக்கு பண்டிகை முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

x