சென்னை: கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அக்.14-ம்தேதிக்குள் அகற்றாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் 20 கிமீ தொலைவுக்கு ஈரடுக்கு அதிவிரைவு மேம்பாலச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கூவம் ஆற்றின் குறுக்கே 13 இடங்களில் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பருவமழைக் காலத்தில் இயற்கையாக நீர் செல்வது பாதிக்கப்பட்டு சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
இதன் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ``விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், செப். 30-ம்தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகளை அகற்ற வேண்டும். அக். 1-ம் தேதி நீர்வள ஆதாரத் துறை ஆய்வு செய்து, முறையாக கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, பல இடங்களில் கட்டிடக் கழிவுகள்அகற்றப்படவே இல்லை என வாதிட்டார். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இதுவரை 67 சதவீத இடங்களில் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ``வரும் அக்.14-க்குள்கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தாததற்காக அபராதம் விதிக்க நேரிடும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்.14-ம் தேதிநடைபெறும்'' என கூறப்பட்டுள்ளது.