உரிய விவரம் இன்றி பால் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளித்தது ஏன்? - மத்திய உணவு பாதுகாப்பு துறைக்கு ஐகோர்ட் கேள்வி


மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் பால் நிறுவனத்துக்கு உரிய தகவல்கள் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று மத்திய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிஉள்ளது.

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பதி தேவஸ்தானத்துக்கு எங்கள் நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக, குஜராத்தை சேர்ந்த நிறுவனம் அறிக்கை அளித்தது. இதையடுத்து, எங்களிடம் நெய் கொள்முதல் செய்ய தடை விதித்து, எங்கள் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் சேர்த்தது. மேலும், எங்களது உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு, மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

முறையாக ஆய்வு நடத்தாமல், தனியார் ஆய்வகம் அளித்த அறிக்கையின் பேரில் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதமாகும். எனவே, மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தரப்பில், “மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை 2 நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ்களுக்கு விளக்கம் தர போதிய காலஅவகாசம் வழங்கவில்லை. மேலும், என்ன விதிகள் மீறப்பட்டுள்ளன என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடவில்லை.

திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அனுப்பிய சோதனை அறிக்கையில், நெய்யில் (மாட்டுக் கொழுப்பு) கலப்படம் இருப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை. சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் சோதனை அறிக்கையில், லட்டுவில் எந்த கலப்படமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸில் முரண்பாடு உள்ளது. எனவே, மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், “சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நெய் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க போதுமான காலஅவகாசம் வழங்கதயாராக உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்துக்கு எந்தசட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது? எந்த வகையான விதிமீறல் காரணமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது? தற்போது கொடுக்கப்பட்டுள்ள 2 நோட்டீஸ்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதானகுற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாமல், தெளிவில்லாமல் உள்ளது.செப்.29-ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, விடுமுறை நாளான அக். 2-ல்விளக்கம் அளிக்கக் கோரினால்,எப்படி விளக்கம் அளிக்க முடியும்? சம்மந்தப்பட்ட நிறுவனம்செய்த விதிமீறல் குறித்து நோட்டீஸ்களில் போதுமான விவரங்கள் இல்லை.

ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ்கொடுக்கப்பட்டால், பதிலளிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும்.சென்னை ஆய்வகச் சோதனை அறிக்கைக்கும், குஜராத் ஆய்வக அறிக்கைக்கும் முரண்பாடுஉள்ளது. கிங்ஸ் ஆய்வக அறிக்கையில் கலப்படம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை, சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் நடத்திய சோதனை முடிவுகளை இதுவரை ஏன் வெளியிடவில்லை? இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. தற்போது இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றம் கூறியதுபோல, அரசியலில் இருந்து கடவுளை விலக்கிவைத்து, விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும். எனவே, புதிதாக நோட்டீஸ் அனுப்பவேண்டும். அதற்கு பதில் அளிக்க 14 நாள் காலஅவகாசம் வழங்க வேண்டும். மனுதாரர் நிறுவனம் உரிய காலஅவகாசத்தில் பதில் அளித்து, நிவாரணம் பெறலாம். இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்

x