நாகர்கோவில் பெண் போலீஸார் அதிகார மோதல்: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்


நாகர்கோவில்: நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ஆஷா ஜெபகர். இவர் குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திற்கு அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கோட்டாறு காவல் நிலையத்தில் இருந்து பணிமாறுதலாகி வந்த சிறப்பு எஸ்ஐ சங்கரலதா என்பவருக்கு வெளிமாவட்ட பாதுகாப்பு பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

அத்துடன் அவர் தன்னை எஸ்ஐ என்று கூறி காவல் நிலையத்தில் அதிகாரம் செய்கிறார். நான் மேற்கொள்ளும் விசாரணைகளை அவரே மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து நான் இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக மேல் அதிகாரிகளிடம் சந்தித்து புகார் அளிக்க இயலவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதைப்போல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியும், எஸ்ஐ ஆஷா ஜெபகர் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குமரி மாவட்ட எஸ்பி சுந்தர வதனம் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐ ஆஷா ஜெபகர் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். எஸ்எஸ்ஐ சங்கரலதாவிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

x