மத்திய அரசு இலங்கையுடன் பேசி சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


படம் : ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: மத்திய அரசு இலங்கை அரசுடன் கண்டிப்புடன் பேசி இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் மீட்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:“தமிழகம் முழுவதும் எதிர்பார்த்ததைவிட உறுப்பினர் சேர்க்கை அதிகமாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினராக சேர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

மதுக் கொள்கையை பொறுத்தவரை தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும். மது ஆலை நடத்துபவர்களை அருகில் வைத்துக்கொண்டு மதுவை ஒழிப்போம் என்பது மக்களை ஏமாற்றும் செயல். இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறுவது அத்தைக்கு மீசை முளைத்தால் கதைதான். மதுவினால் தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, வெட்டுக்குத்து நிகழ்கிறது. மதுகொள்கையில் மக்களை ஏமாற்ற நினைப்பவர்களை வாக்குச் சீட்டின் மூலம் ஏமாற்ற மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசின் கையில் அதிகாரம் உள்ளது. தமிழக மக்கள் நலன் மீது அக்கறை இருந்தால் உடனே மதுக்கடைகளை மூடுங்கள். மதுவில்லா தமிழகம் என்பதுதான் தமாகா கொள்கை.

160-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு இலங்கை அரசுடன் கண்டிப்புடன் பேசி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கும் சூழலை உருவாக்கித்தர வேண்டும்.

தமிழக அரசின் தவறான கல்விக்கொள்கையால் 30,000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் கல்வித்தரம் உயரவேண்டும் என மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை எனும் ஒரு திட்டத்தைக் கொண்டுவரும்போது அதை மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும்போது தமிழக அரசு மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன்?

தமிழகத்தில் புதிய கட்சி ஆரம்பிக்கும்போது ஆரவாரத்துடன் ஆரம்பிப்பது வழக்கம். இதுகுறித்து சொல்வதற்கு எதுவுமில்லை. ரஜினி விரைவில் உடல்நலம்பெற்று வீடு திரும்பிய பிறகு அவரிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரிப்பேன். மின் கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு மூலம் மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றும் அரசாக திமுக அரசு உள்ளது. மதுரை எய்ம்ஸ் குறுகிய காலத்தில் உலக தரத்தில் கட்டி முடிக்கப்படும். மோடி ஆட்சியில் புதுப்பொழிவுடன் திறப்பு விழா நடைபெறும்” இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

x