விசிக மது ஒழிப்பு மாநாடு சலசலப்பு முதல் பங்குச் சந்தை வீழ்ச்சி வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


“மாநாடு 100% வெற்றி; விமர்சனங்களை பொருட்படுத்தாதீர்” - உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர் திருமாவளவன், மாநாடு நூறு சதவீதம் வெற்றி என்றும், விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஃபேஸ்புக் நேரலையில் வியாழக்கிழமை அவர் பேசும்போது, “உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. மாநாட்டை வெற்றி பெறச் செய்த விசிகவினருக்கும், அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்புரையாற்றிய தோழமை கட்சித் தலைவர்களுக்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

திமுக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மாநாட்டில் பங்கேற்ற திமுக பிரதிநிதிகளும், விசிக கோரிக்கைகளுக்கு முரணாக எதுவும் பேசவில்லை. இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி. லட்சக்கணக்கான பெண்கள் மாநாட்டில் பங்கேற்றதை சொல்ல விரும்பாதவர்கள், கட் அவுட் மீது ஏறி நின்றனர், காவல் துறையினரை இடித்து தள்ளினர் என எதிர்மறை தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்தி என்ன பயன்?” - ராமதாஸ்: “மது விலக்குக்காக ஒலிக்கும் குரல்கள் அனைத்தையும் எங்கள் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், மது ஆலைகளை நடத்தும் திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கு பற்றி பேசுவதால் என்ன பயன்?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசிக மீது ஹெச்.ராஜா கடும் தாக்கு: “போதைப்பொருள் விற்பனை அணி என்கிற ஒரு பிரிவையே தன் கட்சிக்குள் மறைமுக அங்கமாக வைத்திருக்கும் திராவிட மாடலோடு கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தியது உலக மகா நாடகம்” என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. இம்முறை வட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாதவரம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் இவற்றில் சில படகுகள் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற மண்டலங்களுக்கும் இதேபோல் படகுகளைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனான் மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் - லெபனானின் பெய்ரூட்டில் இரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இலக்கில் ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவர் வசித்து வந்தார். மேலும், அந்த அமைப்புடன் இணைந்த மருத்துவ தலைமையகம் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது, லெபனான் மக்களை அச்சத்திலும் பரிதவிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்: மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. முன்னதாக, அவர் தனது ஜாமீன் மனுவில் மன்னிப்புக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கு அப்டேட் - கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள அதன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில், காவல் துறை மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கில், காவல் துறையினர் மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது. அடுத்த விசாரணையின்போது, புகார்தாரர் காமராஜ் அல்லது அவரது தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி வழியாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்: “தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச் சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான். திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

காங்கிரஸுக்கு திரும்பிய அசோக் தன்வார்! - ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் தன்வார் வியாழக்கிழமை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: மத்திய கிழக்கில் நிலவும் போர் தீவிரம் அடைந்துள்ளதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை கடும் வீழ்ச்சி நிலவியது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ்1,769 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 546 புள்ளிகள் சரிந்திருந்தது. அதேவேளையில், சென்னையில் வியாழக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.56,880-க்கு என்ற புதிய உச்சத்தில் விற்பனை ஆனது.

அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன்: ஹைதராபாத் கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

x