தேனி வீரபாண்டியில் வாகனங்களை எங்கு நிறுத்தினாலும் கட்டண வசூல் - பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!


முல்லை பெரியாற்று பாலத்தின் ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள். (அடுத்தப்படும்) வாகன கட்டணம் வசூல் செய்த ரசீது. படங்கள்:என்.கணேஷ்ராஜ்.

தேனி: வீரபாண்டியில் எந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தினாலும் அதற்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடையார் கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற தலமாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு சுவாமி தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். கோயில் அருகிலேயே முல்லை பெரியாறும் கடந்து செல்கிறது. இதனால் ஆடி 18 உள்ளிட்ட விசேஷ நாட்களில் நதி வழிபாடும் இங்கு சிறப்பாக நடைபெறும். இதன் மேற்குப் பகுதியில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்குள்ள தடுப்பணை நீராட உகந்ததாக இருப்பதால் இப்பகுதியை கடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி இங்கு நீராடிவிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியின் சாலையோரங்களில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ரூ.10 முதல் ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதான மண்டபத்துக்கு பின்புறம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க ஏலம் விடப்பட்டுள்ளது. ஆனால், ஆற்றுப் பாலம், காவல் நிலையம், கம்பம் ரோடு, வீரபாண்டி புறவழிச்சாலை செல்லும் வழி, தேனி சாலை என்று எந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தினாலும் டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய கட்டண வசூல் செய்யப்படுகிறது.

இது பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் கூறுகையில், "திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நிறுத்தும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்ய ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்காக காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விபத்துக்களைத் தவிர்க்க பாலம், சாலையோரம் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்சினை சரி செய்யப்படும்" என்றனர்.

x