“மூன்று ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 50% அதிகரிப்பு”- ஹெச்.ராஜா ஆதங்கம்


திண்டுக்கல்லில் நடந்த பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா. படம்: என்.தங்கரத்தினம்.

திண்டுக்கல்: கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என திண்டுக்கல்லில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். முன்னதாக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: "திராவிட மாடல் ஆட்சி எல்லா துறைகளிலும் மக்கள் விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல மடங்கு சொத்து வரி உயர்த்திய பிறகும், வருடத்திற்கு ஆறு சதவீதம் சொத்து வரி உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற நடுத்தர மக்களைப் பற்றி அக்கறை இல்லாத அரசாங்கமாக மாநில அரசு உள்ளது. ஒரு லிட்டர் பால் கொள்முதலுக்கு ரூ.3 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஊக்கத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு தனது குடும்பத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு வருவதற்கும், மகனை முதல்வராக கொண்டுவர வேண்டும் என்பதையும் தவிர மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.

உளுந்தூர்பேட்டையில் ஒரு நாடகம் நடைபெற்றது. டாஸ்மாக்கை திறக்கின்ற சாவி மாநில அரசிடமும் அதை மூடுகின்ற சாவி மத்திய அரசிடம் உள்ளதாம். இது மிகப்பெரிய அரசியல் மோசடியின் ஒட்டுமொத்த நாடகம். அந்த மாநாட்டில் பெண் காவலர் ஒருவரை அடித்துள்ளனர். இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் சொரூபம்.

ஆளுநர் பேசுவதை பார்த்து சட்ட அமைச்சருக்கு கோபம் வருகிறது. ஆளுநர் சரியாகத்தான் பேசியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் மாநாடு நடத்துவதற்கு எனது வாழ்த்துகள். மாநாட்டில் கொள்கையை கூறட்டும் அதன் பின்பு அதைப்பற்றி பேசலாம்" என்று ஹெச்.ராஜா கூறினார்.

x