தூத்துக்குடி: புத்தக வாசிப்பால் உலகத்தை கைகளுக்குள் கொண்டு வர முடியும் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது புத்தகத் திருவிழா தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி பிரிவு பகுதியில் 11 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, தமிழக நிதி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர் புத்தக திருவிழா அரங்குகளை திறந்துவைத்து பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "இளைஞர்களிடம் மறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும், ஆண்டு தோறும் புத்தக திருவிழாக்களை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் மூலம் இளைஞர்களிடம் மீண்டும் வாசிப்பு பழக்கம் அதிகரித்து வருகிறது. அறிவாற்றலை விருத்தி செய்துகொள்ள இந்த புத்தக திருவிழாவை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
கனிமொழி எம்.பி பேசுகையில், "திராவிட மொழிக் குடும்பம் தான் முதலில் தோன்றிய மொழிக் குடும்பம் என முதன் முதலில் தூத்துக்குடியில் இருந்து தான் கால்டுவெல் மூலம் குரல் ஒலித்தது. வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை, பார்வையை, கருத்தியலை புரிந்துகொள்ள மிகச் சிறந்த வழி புத்தகங்கள் மட்டும் தான். அதனால் தான் கருணாநிதி தன் வாழ்நாள் முழுவதும் புத்தக வாசிப்பின் வழியாக மக்களின் அடிப்படை தேவைகளை புரிந்துகொண்டு திட்டங்களை வகுத்து நிறைவேற்றினார்.
புத்தக வாசிப்பு என்பது மட்டுமே நம்மை தெளிவுப்படுத்தும், நமக்கான சரியான ஒரு பாதையை உருவாக்கித் தரும். தலைமைத் துவம் என்பது மனிதனைப் புரிந்து கொள்வது மட்டும் தான். அத்தகைய தலைமைத்துவம் புத்தக வாசிப்பின் மூலம் தான் வரும். எனவே, புத்தகங்களை படியுங்கள், வாசியுங்கள். அது மட்டும் தான் உங்கள் கைகளுக்குள் உலகத்தை கொண்டு வந்து சேர்க்கக் கூடிய ஒன்றாக இருக்கும்" என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு தோறும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இதனை ஆண்டு தோறும் 50 லட்சம் பேர் பார்வையிடுகின்றனர். சராசரியாக ஆண்டுக்கு ரூ.66 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. தூத்துக்குடி மாவட்டம் சுதந்திர போராட்டத்தில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியம், எழுத்து, இசை, கலச்சாரம், நாகரிகம், பண்பாடு என பல விசயங்களில் உலகுக்கே முன்னோடியாக இருக்கிறது.
ஐரோப்பாவுக்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழிலே தான் வெளி வந்துள்ளது. அந்த நூல் வெளி வருவதற்கு காரணமான 3 பேரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது நமக்கு பெருமை. அதுபோல முதல் அச்சகம் உருவானது தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் தான். அதுபோல நாட்டிலேயே முதல் முறையாக அகழாய்வு நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தான். பொருநை நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை நாகரிகங்கள் முன்னோடி நாகரிகங்களாக உள்ளன. அதுபோல தமிழ் இலக்கிய படைப்பாளிகள், இசை மேதைகள், எழுத்தாளர்கள் தோன்றிய மண் இந்த தூத்துக்குடி. இந்த பெருமைகளை தெரிந்து கொள்ள இந்த புத்தக திருவிழா ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), எஸ்பி ஆல்பட் ஜான், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், பபாசி செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புத்தகத் திருவிழா வரும் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 113 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 100 புத்தக அரங்குகள், 13 அரசுத் துறை அரங்குகள் என மொத்தம் 113 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடைசி மூன்று நாட்கள் (அக். 11 முதல் 13 வரை) 3-வது நெய்தல் கலைத் திருவிழா நடைபெறுகிறது. இந்த 3 நாட்களும் மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உணவு அரங்குகளும் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.