சாலையில் வாழை மரம் நடும் போராட்டம் நடத்திய 9 பேர் கைது: திருவிடைமருதூர் அருகே பரபரப்பு! 


திருவிடைமருதூர்: பருத்திச்சேரியில் சாலை அமைக்க வலியுறுத்தி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையின் நடுவில் வாழை மரம் நடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் எஸ்.பழனிவேலு தலைமை வகித்தாா். கிளைச் செயலாளர் எம்.வீரமணி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ஜி.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று, பருத்திச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை அமைக்காததையும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் கண்டுகொள்ளாததையும் கண்டித்து, அந்தச் சாலையின் நடுவில் வாழை மரம் நட்டு கண்டன முழக்கமிட்டனர்.

இதையறிந்து அங்கு வந்த திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாடன், வீரமணி, நாச்சியார் கோவில் காவல் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி 2 மாதத்திற்குள் சாலை அமைத்துத் தரப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று மரம் நடும் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் அனுமதியின்றி சாலையின் நடுவில் வாழை மரத்தை நடவு செய்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

x