ஆவின் விற்பனையில் சரிவை ஏற்படுத்த சதியா?- பால் முகவர்கள் சங்கம் கேள்வி


சென்னை: தரமற்ற பாலினை பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் ஆவின் பால் மீது அதிருப்தியை ஏற்படுத்தி, அதன் விற்பனையில் சரிவை ஏற்படுத்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சதி செய்கின்றனரா என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து அச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆவின் பாலில் மண்ணெண்ணெய் வாசம் மட்டுமின்றி ஒருவித துர்நாற்றம் வீசுவதாகவும், பாலில் புழு போன்ற தூசிகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குற்றச்சாட்டுகளை அவரவர் சமூக வலைதள (X) பக்கத்தில் பதிவிட்டு வரும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

குறிப்பாக மதுரை, ஈரோடு, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பாலின் தரம் குறைந்த நிலையிலேயே தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் கூட அதுகுறித்து ஆவின் நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ஆவின் பால் பண்ணைகளுக்கும் பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களில் இருந்து கொண்டு வரப்படும் பாலின் தரத்தினை ஆய்வு செய்வது மட்டுமின்றி, பொதுமக்கள் விநியோகத்திற்கான பால் பாக்கெட்டுகள் உற்பத்தியை கண்காணிக்கும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதற்காக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்..? அவர்களின் பணிகள் தான் என்ன..? அவர்களுக்கு எதற்காக மாதந்தோறும் லட்சக்கணக்கில் ஊதியம், அகவிலைப்படி எல்லாம் வழங்கப்படுகிறது..? என தெரியவில்லை.

"புதியது, தூயது" என விளம்பரம் செய்யும் ஆவின் நிர்வாகம் குழந்தைகள் அருந்தும் பாலினை பாக்கெட்டுகளில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் போது தரத்தில் எப்படி சமரசம் செய்து கொள்கிறது..? எனவும் தெரியவில்லை. அத்துடன் மெத்தனமாக இருக்கும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது இதுவரை ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஒருவேளை தரமற்ற பாலினை பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் ஆவின் பால் மீது அதிருப்தியை ஏற்படுத்தி, அதன் விற்பனையில் சரிவை ஏற்படுத்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சதி செய்கின்றனரா..? அவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆவின் பொது மேலாளர்களும் உடந்தையாக இருக்கின்றனரா..? என்கிற சந்தேகம் எழுகிறது.

அத்துடன் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட நுகர்வோர் ஆவின் நிர்வாகத்தை tag செய்து பதிவிட்டு வரும் நிலையில் ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்தோ, ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் தரப்பிலிருந்தோ இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..? என்பதற்கான விளக்கம் வெளியிடப்படவில்லை.

மேலும் உணவகங்களில் குறிப்பாக பிரியாணி கடைகளில் உணவின் தரமில்லை என்று கூறி உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலின் தரம் குறித்து ஆவின் நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் எவ்வளவு பேர் குற்றச்சாட்டுகள் முன் வைத்தாலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தயங்குவதை பார்க்கும் போது ஆவின் பால் பண்ணைகளில் உள்ள தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் மற்றும் ஆவின் பொது மேலாளர்களோடு மறைமுக ரகசிய கூட்டு வைத்து செயல்படுகின்றனரோ..? என்கிற சந்தேகமும் எழுகிறது" என்று கூறியுள்ளார்.

x