சென்னை: தமிழகத்தில் டீன்கள், துணைவேந்தர்கள் நியமனத்தில் அக்கறை காட்டாமல், துணை முதல்வர் நியமனத்தில் அவசரம் காட்டியுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் நினைவிடத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சிறுத்தையாக இருந்த விசிக,சிறுத்துப் போய்க் கொண்டிருக்கிறது. மது ஒழிப்பு மாநாடு மகளிர் மாநாடாக மாறியுள்ளது. மது ஒழிப்பு மாநாட்டுக்கு அவர்கள் கட்சியிலேயே ஆதரவு இல்லை. மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 36 மருத்துவ கல்லூரிகளில் 11 கல்லூரிகளில் டீன்இல்லை. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. அவர்களை நியமிப்பதில் அக்கறைகாட்டாமல், துணை முதல்வர் நியமிப்பதில் அவசரம் காட்டுகின்றனர்.
‘முதல்வர் ஸ்டாலின் மூலவர்,உதயநிதி உற்சவர்’ என்கிறார் அமைச்சர் ரகுபதி. என்னை பொருத்தவரை, தமிழகத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும் மூலமாக இருப்பவர்தான் மூலவர். தனக்கு துணை முதல்வர் பதவி கிடைத்துவிட்டதால் உற்சாகமாக இருப்பவர்தான் உற்சவர்.
‘முதலில் தமிழகத்தில் மதுவிலக்கை அறிவிக்கட்டும். அதன்பிறகு, நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த மத்தியஅரசிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம். படிப்பதற்கு கொள்கை கொண்டு வந்தால் ஏற்காத திமுகவினர், குடிப்பதற்கு கொள்கை கொண்டு வந்தால் மட்டும் ஏற்றுக் கொள்வார்களா.
தமிழகத்தில் ஓர் அரசியல் கட்சி தலைவரைக்கூட சுலபமாக கொலை செய்துவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வாங்க போராட வேண்டி உள்ளது. இவ்வாறு கூறினார்.
திருமாவளவன் விளக்கம்: விசிக தலைவர் திருமாவளவன், காந்தி மண்டபம் செல்லாமல் காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்திவிட்டு சென்றார்.தமிழிசையும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து திருமாவளவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காலை 9.30 மணி அளவில் காந்தி மண்டபம் சென்றோம். ஆளுநர் 10.30 மணிக்கு வருவார். அவர் வந்து சென்ற பிறகுதான் மற்றவர்களுக்கு அனுமதி என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர்.அதனால், காமராஜர் மணிமண்டபம் சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினோம். மாநாட்டுக்காக உளுந்தூர்பேட்டை செல்லவேண்டி இருந்ததால், 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டோம். இவ்வாறு கூறியுள்ளார்.