காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் - கேளம்பாக்கத்தில் மின்னழுத்த பிரச்சினை தீர்க்கப்படும் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கேளம்பாக்கம் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ . அன்பரசன், ஆட்சியர் அருண்ராஜ், பொதுமக்கள் பங்கேற்றனர். | படம்: எம்.முத்துகணேஷ் |

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: கேளம்பாக்கம் மக்கள் குறைந்த மின் அழுத்த பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவித்துள்ளதால், அப்பிரச்சினை 10 நாட்களில் சரி செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிராம சபை கூட்டத்தில் உறுதியளித்தார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கேளம்பாக்கம் ஊராட்சியில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்துக்கு தலைவர் ராணி தலைமை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன், ஆட்சியர் ச. அருண்ராஜ் பங்கேற்றனர். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் முன்வைத்தனர். அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது: கேளம்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்சினைதான் அதிக நபர்களால் குறையாக தெரிவிக்கப்பட்டது அந்தக் குறை 10 நாட்களில் செய்து தரப்படும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரும். கேளம்பாக்கம் ஊராட்சி இன்னும் ஒரு வருடத்தில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாறும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்துஸ்தான் மற்றும் பாரத் கல்லூரி மாணவ- மாணவியர் இக்கூட்டத்தில் பங்கேற்று கிராம சபை கூட்டம் நடைபெறும் முறையை பார்வையிட்டனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பி.சுபா நந்தினி, சார் ஆட்சியர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், எம்.பி. க.செல்வம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி அஷ்டலட்சுமி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் சரஸ்வதி மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வமணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் 800-வது நாளை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் 9-வது முறையாக இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழ் பேரரசுக் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் பங்கேற்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் பெரும்பாலானவற்றில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருத்தணி அருகே கோரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

இக்கூட்டத்தில்ஆட்சியர் பிரபு சங்கர், திட்ட இயக்குநர்கள் ஜெயக்குமார் (ஊரக வளர்ச்சி முகமை), செல்வராணி (மகளிர் திட்டம்), உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, இணை இயக்குநர் (வேளாண்மை). முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜ்குமார், திருத்தணி கோட்டாட்சியர் தீபா, திருத்தணி எம்எல்ஏ சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x