லண்டன், சிங்கப்பூர் விமானங்களில் கோளாறு: பல மணி நேரம் காத்திருந்த 500 பயணிகள்


சென்னை: லண்டன், சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட தால், சென்னை விமான நிலையத்தில் 500 பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பயணித்தனர்.

லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தபின், மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்வது வழக்கம்.

317 லண்டன் பயணிகள்: நேற்று இந்த விமானத்தில் லண்டன் செல்வதற்காக 317 பயணிகள் அதிகாலை 2.30 மணிக்கு முன்பாகவே விமான நிலையம் வந்து அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துவிட்டு காத்திருந்தனர்.

லண்டனில் இருந்து சுமார் 300 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

லண்டனில் இருந்து வரும் விமானம் தாமதம் ஏற்பட்டதால், சென்னையில் இருந்து லண்டன் புறப்படும் நேரம் தாமதம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, 317 பயணிகளும் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, அந்த விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. பின்னர், 5 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது.

சிங்கப்பூர் விமானம்: அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூரில் இருந்து தாமதமாக சென்னைக்கு வந்தது. இதனால், சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.40 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது.

ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த 188 பயணி களும் அந்த விமானத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றனர். லண்டன், சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

x