கேளம்பாக்கம் இன்னும் ஓராண்டுக்குள் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாறும்: அமைச்சர் அன்பரசன் உறுதி


கேளம்பாக்கம் கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர், ஆட்சியர் பங்கேற்று மக்கள் குறைகளை கேட்டறிந்தனர். படம் எம். முத்துகணேஷ்.

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் ஊராட்சி இன்னும் ஒரு வருடத்தில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாறும் என இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் உறுதியளித்துள்ளார்.

கேளம்பாக்கம் ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவர் ராணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், ஆட்சியர் ச.அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

கூட்டத்தில் பொதுமக்கள் பேசுகையில், "எஸ்ஆர்எஸ் நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினை, அம்பேத்கர் நகர் பகுதியில் மின் வயர்கள் தொங்கிய நிலையில் செல்லுதல், கேளம்பாக்கம் - கோவளம் சந்திப்பில் சாலை தடுப்புகளை அகற்றக் கோருதல், சாலைகளில் அனுமதி இன்றி பள்ளம் தோண்டி மூடாமல் விடுதல், சாலை நடுவே அமைந்துள்ள மின் கம்பங்களை அகற்றக் கோருதல் உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டினர்.

மேலும், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோருதல், விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தர கோருதல், கால்நடை மருந்தக ஆய்வு மையத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற கோருதல், அண்ணா நகர் பகுதிக்கு பட்டா வழங்கக் கோருதல், மின்னழுத்த பிரச்சினை, பொதுமக்கள் வசிப்பிடங்களில் அனுமதி இன்றி லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவு நீரை விட்டுச் செல்வதை தடை செய்யக் கோருதல், ஆதார் மையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் முன்னிலையில் பேசினர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் அன்பரசன், "கடந்த மூன்று ஆண்டுகளில் கேளம்பாக்கத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை போதுமான அளவிற்கு செய்து தரப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தெரிவித்துள்ள சிறு, சிறு குறைகளையும் குறைந்தபட்சம் 10 நாளில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் சரி செய்து தருவோம்” என்றும் உறுதி அளித்தார்.

மேலும், “ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் எந்தக் கோரிக்கையை வைத்தாலும் அவற்றை கண்ணும் கருத்துமாக செய்துத் தர வேண்டும் என எங்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் கேளம்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை தான் அதிக நபர்களால் குறையாக தெரிவிக்கப்பட்டது. அது இன்னும் 10 நாட்களில் சரிசெய்து தரப்படும். மக்களின் தேவைகளையும் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அந்த வகையில் கேளம்பாக்கம் ஊராட்சி இன்னும் ஒரு வருடத்தில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாறும் என உறுதி அளிக்கிறேன்” என்றார்.

ஆட்சியர் அருண்ராஜ் பேசுகையில், “இந்த கிராம சபைக் கூட்டத்தில் பெண்கள் அதிகமாக பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று உங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். உங்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இன்றைய கூட்டத்தில் இந்துஸ்தான் மற்றும் பாரத் கல்லூரி மாணவ - மாணவியரும் பங்கேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் முறையை பார்வையிட்டனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், எம்பி செல்வம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

x