பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை கிடைப்பதில் சிக்கல் - நூல் வழங்குவதில் தாமதம்


கோப்புப் படம்

ஈரோடு: தமிழக அரசின் சார்பில், பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்கு இதுவரை நூல் வழங்கப்படாத நிலையில் 50 சதவீத உற்பத்தியை மட்டுமே மேற்கொள்ள முடியும், என விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன்கார்டுதாரர்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்டப் பயனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம், 1.77 கோடி வேட்டி மற்றும் சேலை உற்பத்தி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், காந்தி ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவையைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், பொங்கல் பண்டிகைக்கு விநியோகம் செய்யும் வகையில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வேட்டி, சேலை உற்பத்திக்கான நூல் வழங்கப்படாததால் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வாய்ப்பில்லை என விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள் கூறியதாவது: விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வேட்டி உற்பத்திக்கான நூல் இதுவரை 180 மெ.டன் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நூலை ஈரோடு, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் கோவையில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.

அதன்பின்னர் தான் விசைத்தறி நெசவாளர்களுக்கு நூல் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், பாபின் கட்டை நூல் மற்றும் வண்ண நூல் ஆகியவை இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் 50 சதவீத வேட்டி உற்பத்தியை முடித்து இருந்தோம். தற்போது, 5 சதவீத உற்பத்தியைக் கூட தொடங்க முடியாத சூழலில் உள்ளோம்.

இந்த வாரத்தில் நூல் விநியோகம் சீரானால் மட்டுமே டிசம்பர் 31-ம் தேதிக்குள் 50 சதவீத உற்பத்தியை முடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் 100 சதவீத உற்பத்தியை முடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வழக்கமாக விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். இதன் மூலம் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் போது, அவற்றை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியும்.

இந்நிலையில், இந்த ஆண்டு அரசின் உத்தரவு தாமதமாக வெளியிடப்பட்டதோடு, நூல் விநியோகமும் தாமதமாகி உள்ளதால் பொங்கலுக்கான விலையில்லா வேட்டி, சேலையை உரிய நேரத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

x