“சீமானின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டன” - நாதக கிருஷ்ணகிரி நிர்வாகி குற்றச்சாட்டு


கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள்.

கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் தற்போது முற்றிலும் மாறிவிட்டன என அக்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர் களிடம், அவர் கூறியதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாடுகள் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. மாநிலப் பொறுப்பாளர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளனர். மதுரை, சென்னை, சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம் பகுதிகளில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான் உட்பட ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி செயலாளர் ஈழமுரசு, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன், கிருஷ்ணகிரி தொகுதி தலைவர் திருமூர்த்தி, பர்கூர் தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் காசிலிங்கம், ஒன்றிய செயலாளர் செல்வா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாதக செயல்பாடுகளிலிருந்து விலகி உள்ளோம்.

ஆனால், இதைப்பற்றி சீமானுக்குக் கவலையில்லை. மாறாக, “சாக்கடை அடைப்பு, கிளைகள் போனால் மரங்கள் விழுமா?” என விமர்சிக்கிறார். நாங்கள் கட்சியில் சேரும்போது செல்வந்தர்களாக இருந்தோம். இன்று தினக் கூலிகளாகியுள்ளோம். மேலும், பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளோம்.

திமுக-அதிமுகவினர், பணம் படைத்தவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சீமான் செல்கிறார். மனிதர்களாகக் கூட எங்களை மதிப்பதில்லை. அடிமைகளாக்கியுள்ளார். மேலும், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்தி அவரே பேசி, அவரே முடிவெடுத்துக் கொள்கிறார்.

50 ஆண்டுகள் ஆனாலும் நாம் தமிழர் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. எங்களை யாரும் கட்சியிலிருந்து நீக்கவில்லை. இருப்பினும் கட்சியில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களின் வலிகளை மட்டுமே நாங்கள் கூறுகிறோம்.

கட்சியிலிருந்து விலகிய மாநில நிர்வாகிகளை ஒன்றிணைத்து, சீமான் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று சேர்க்கவேண்டும். இல்லையெனில் நாங்கள் தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகப் போராடும் கட்சிகளுடனோ அல்லது புதிய அமைப்பையோ உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

x